“கரூரில் பாட்டு பாடுனீங்களே.. இப்போ இதுக்கு என்ன பாட்டு?”…. தவெக-வை துவைத்து தொங்கவிட்ட செந்தில் பாலாஜி….!

By Nanthini on புரட்டாதி 14, 2026

Spread the love

கடந்த ஆட்சிக்காலத்தில் “பாட்டிலுக்கு பத்து ரூபாய்” என்று கரூருக்கு வந்து பாட்டு பாடி விமர்சனம் செய்தவர்கள், இப்போது தங்கள் ஆட்சியில் குவாட்டருக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதைக் கண்டு மௌனம் காப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், “இந்த கூடுதல் விலைக் குற்றச்சாட்டினை நான் மட்டுமே கூறவில்லை; சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரே பத்திரிகையாளர் சந்திப்பில் ஒப்புக்கொண்டுள்ளார். உண்மைத் தன்மையை அறியாமல் யாரோ எழுதிய ஸ்கிரிப்டை சினிமா டயலாக் போலப் பேசுபவர்களை நேர்மையான அரசியல் தலைவராகக் கருத முடியாது” என்று காட்டமாக விமர்சித்தார்.

தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சியை “ரீல்ஸ் ஆட்சி, ரியல் ஆட்சி இல்லை” என்று சாடிய செந்தில் பாலாஜி, அரசிற்கு மக்கள் பிரச்சினைகளைக் காதுகொடுத்துக் கேட்கவோ அல்லது அவற்றுக்குத் தீர்வு காணவோ நேரமில்லை என்று குறிப்பிட்டார். குறிப்பாக, முதியோர் உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் தடையின்றி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய சூழலில் பல இடங்களில் மக்களுக்கு அந்த நிதி இன்னும் சென்று சேரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அரசின் நிர்வாக முடக்கத்தை வெளிப்படுத்தினார்.

   

அரசியல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், தவெக தரப்பில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறுவது முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது என்றார். “ஆட்சி அமைந்த அடுத்த நொடியே விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்களே, அது என்ன ஆயிற்று? 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டதா? தாங்கள் நிறைவேற்றிய வாக்குறுதிகள் என்னென்ன என்பதை வெளிப்படையாகப் பட்டியலிடத் தயாரா?” என சவால் விடுத்த அவர், தவெக அரசு தனது செயல்பாடுகளை வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு நிரூபிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

   

தமிழகம் தற்போது இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாகத் திகழ்வதற்கு திமுக தலைவர் ஸ்டாலினின் சிறந்த நிர்வாகமே காரணம் என்று பெருமிதம் தெரிவித்த செந்தில் பாலாஜி, வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தவெக-வின் ஆட்சி தொடர்ந்து 5 ஆண்டுகள் நீடித்தால், தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் குறைந்தது 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும் என்று எச்சரித்துத் தனது உரையை நிறைவு செய்தார்.