இந்திய அரசியலில் ‘இந்தியா’ கூட்டணியின் முக்கியத் தூணாகச் செயல்பட்டு வந்த திமுக, தமிழகத் தேர்தலுக்குப் பிந்தைய புதிய அரசியல் சூழ்நிலைகளால் காங்கிரஸை விட்டு விலகி தனிப்பாதையைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கரங்கோர்த்தது திமுகவை அதிருப்தியடையச் செய்ததை அடுத்து, நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் எம்பிக்களுக்கு அருகில் அமர்வதைத் தவிர்க்க தனி இருக்கை கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கடிதம் எழுதினார். இதனால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும் நிலையிலேயே, தேசிய அரசியலில் தனது அடுத்த கட்டப் பகடைக்காய்களை திமுக நகர்த்தத் தொடங்கியுள்ளது.
இதன் முதல் படியாக, மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேவின் ‘மாதோஸ்ரீ’ இல்லத்திற்குச் சென்ற கனிமொழி, சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பில் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் பிராந்தியக் கட்சிகளின் எதிர்காலப் பங்களிப்பு குறித்துப் பேசப்பட்டதாக வெளியில் தெரிவிக்கப்பட்டாலும், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தேசியக் கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு வலிமையான ‘3-வது அணியை’ உருவாக்குவதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தையே இதுவென்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
தேசிய அளவில் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி போன்ற பிராந்தியக் கட்சிகள் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு அணிகளிலுமே இணைய முடியாமல் ஒதுங்கியிருக்கின்றன. அதேவேளையில், ‘இந்தியா’ கூட்டணியில் நீடிக்கும் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா போன்ற தலைவர்களும் பல்வேறு மாநில விவகாரங்களில் காங்கிரஸுடன் தொடர் முரண்பாடுகளைக் கொண்டுள்ளனர். இத்தகைய பிராந்தியக் கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, தேசிய அரசியலில் தங்களின் செல்வாக்கை உறுதி செய்ய திமுக திட்டமிடுகிறது.
தென்னிந்திய மாநிலங்களின் நலன் மற்றும் தொகுதி மறுவரையறையால் வரவிருக்கும் அரசியல் சவால்களை எதிர்கொள்ள பிராந்தியக் கட்சிகளின் ஒற்றுமை அவசியம் என்பதை உணர்ந்தே திமுக இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. தொகுதி மறுவரையறை என்ற பொதுவான பிரச்சனையைக் கையில் எடுத்து, அதன்மூலம் அனைத்து மாநிலக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பிரம்மாண்ட 3-வது அணியை உருவாக்கும் திமுகவின் இந்த ஆரம்பக்கட்ட அரசியல் நகர்வு, 2029 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி தேசிய அரசியலில் ஒரு புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
