தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளது.
இவர்களுக்கு நடுவே மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி, மருது அழகுராஜா உள்ளிட்டோர் எம்ஜிஆருக்கு அடுத்து விஜய் தான் என்று ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக மீண்டும் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என இபிஎஸ் திட்டவட்டமாக கூறிய பிறகு தான் இவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. இதனால் 2026 தேர்தலில் இபிஸ்க்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் பரப்புரை செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
