தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுகவில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் சமீப காலமாகவே மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கட்சியின் விதிகளுக்கு எதிராக செயல்பட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சிப் பதவி பறிப்பில் ஈடுபட்டது மிகப்பெரிய கவனத்தை பெற்றது.
இந்த விஷயத்திற்கு பிறகு செங்கோட்டையன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தெரியாமல் அதிமுக தலைமையும் அமைதி காத்திருந்தது. இதனிடையே இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஜெயந்தியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மரியாதை செலுத்த வந்திருந்த நிலையில் அங்கு செங்கோட்டையன் அவர்களை சந்தித்து பேசியது புதிய பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்த நிலையில் நேற்று செங்கோட்டையன் ஆதரவாளர்களான முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட 14 பேரை கட்சியிலிருந்து இபிஎஸ் நீக்கினார். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க செங்கோட்டையன் வலியுறுத்தி இருந்தார். அது குறித்து அதிமுக தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் செங்கோட்டையனின் பலத்தை நிரூபிக்கும் வகையில் ஈரோட்டில் இன்று Mass Resignation என்ற பெயரில் பலரும் ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
