தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மேடையிலேயே கண்ணீர் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தவெக கட்சியில் இணைந்த அவர், தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது மிகவும் உருக்கமாகக் காணப்பட்டார். குறிப்பாக, ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகத் தான் விஜய்யிடம் பேசியதாகவும், அதற்கு அவர் எவ்விதத் தயக்கமுமின்றி அனுமதி அளித்ததாகவும் தழுதழுத்த குரலில் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்த தனக்கு, விஜய் நல்லதொரு அடைக்கலத்தைக் கொடுத்து மதிப்பளித்ததாக அவர் உணர்ச்சி பொங்கக் கூறினார். விஜய்யின் இந்தச் செயல் தனக்கு மிகுந்த ஆறுதலைத் தந்ததாகக் குறிப்பிட்ட அவர், தவெக தலைவர் காட்டிய அன்பையும் மரியாதையையும் நினைவுகூர்ந்து மேடையிலேயே கண் கலங்கினார். மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் மேடையிலேயே அழுதது, அங்கு கூடிருந்த தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, சமூக வலைதளங்களிலும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
