வருகிற 16ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஈரோட்டில் மாபெரும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் கேஏ செங்கோட்டையன் செய்து வருகிறார். கரூர் சம்பவத்துக்கு பிறகு ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதன்முறையாக பொதுவெளியில் மக்களை சந்தித்து கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உரையாற்ற இருக்கிறார்.
அதனால் இந்த பொதுக்கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேஏ செங்கோட்டையன் கூறுகையில், அதிமுக திமுக என்ற இரண்டு கட்சிகளே மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றன. புதியவர்கள் யாரும் தமிழகத்தை ஆட்சி செய்யக்கூடாதா? தவெக கட்சியின் சின்னம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். நாடே வியக்கும் விதமான ஒரு சின்னத்தைதான் நாம் பெற இருக்கிறோம். நிச்சயமாக இந்த சின்னம் மிகப்பெரிய அளவில் மகத்தான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியிருக்கிறார்.
