தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்துத் தெரிவித்த தரக்குறைவான விமர்சனங்கள் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. “விஜய் த்ரிஷாவை விட்டு வெளியே வரட்டும்” என அவர் பேசியது நாகரிகமற்ற செயல் எனப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிகின்றன. இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பதில் சொல்லத் துணிவில்லாமல் நயினார் நாகேந்திரன் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டுச் சென்றது அவர் மீதான விமர்சனங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் நயினார் நாகேந்திரனுக்குக் கடும் பதிலடி கொடுத்துள்ளார். “நயினார் இருப்பதெல்லாம் ஒரு கட்சியா? அவரெல்லாம் ஒரு ஆளா?” என மிகக் காரசாரமாகச் சாடியுள்ள அவர், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரித்துள்ளார். திரையுலகைச் சேர்ந்த பெண்ணைத் தேவையின்றி அரசியல் லாபத்திற்காக இழுப்பது நயினாரின் அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது என செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.
