அதிமுகவில் இருந்து விலகி தற்போது தமிழக வெற்றி கழகத்தில் (TVK) இணைந்துள்ள செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு மிகக் கடுமையான பதிலடியைத் தந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நினைவூட்டிய செங்கோட்டையன், “அன்று 13 பேரை குருவி சுடுவது போலச் சுட்டுக் கொன்றார்கள்; அப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் விஜய்யைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை” எனச் சாடினார். மேலும், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை என்ற ஈபிஎஸ்-ஸின் விமர்சனத்திற்கு, “விஜய் நேரில் சென்று உதவினார், ஆனால் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களைத் திரும்பிப் பார்த்தீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அரசியல் களம் மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், போட்டி என்பது இப்போது திமுக மற்றும் தவெக இடையேதான் இருக்கும் என்றும், அதிமுக இந்தப் போட்டியில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி திமுகவின் ‘பி-டீம்’ ஆகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், விஜய்யின் மக்கள் செல்வாக்கைக் கண்டு அதிமுக தலைமை அச்சமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
