செங்கோட்டையன் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடிக்கு கெடு விதித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரை முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். பிறகு அமித்சாவை சந்தித்து பேசிய செங்கோட்டையன் மௌனம் காத்து வந்தார். இதனிடையே சமீபத்தில் பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தார்.
இது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை கிளப்பி இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக கட்சியிலிருந்து மொத்தமாக செங்கோட்டையனை நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இந்நிலையில் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திடம் இன்று எழுத்துப்பூர்வ கடிதம் அளித்துள்ளார் அதிமுக முன்னாள் தலைவர் செங்கோட்டையன். எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குவதாக கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையில் அக்கட்சி அல்ல என்றும் கட்சியின் உண்மை நிலை என்ன என்பதை நிரூபிக்க ஆணையத்திடம் கால அவகாசம் கோரியுள்ளார்.
