“தவறு பண்ணிட்டோம் மாமா”…. ஸ்டாலினுக்கு ஓட்டு போடாதவர்கள் கதறி அழுவது ஏன்?…. செல்வபெருந்தகை உடைத்த ரகசியம்….!

By Nanthini on ஆனி 27, 2026

Spread the love

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் தோல்வி குறித்தும், அவர் சட்டசபையில் இல்லாதது குறித்தும் குட்டிக்கதை கூறி நையாண்டி செய்திருந்தார். விஜய்யின் இந்த பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவி விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், முதல்வர் விஜய்யின் இத்தகைய பேச்சுக்கள் அநாகரீகமானது என்று அவர் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“சட்டசபையில் நடந்தவை அனைத்தும் அருவருக்கத்தக்கவை; அது ஒன்றும் சினிமா சூட்டிங் ஸ்பாட் கிடையாது” என்று சாடிய செல்வபெருந்தகை, மாண்புமிக்க வரலாற்றுச் சிறப்புமிக்க அவையில் கையைத் தூக்கிக் காட்டிப் பேசியதை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்று தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களைத்தான் தற்போதைய அரசு நடைமுறைப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், திமுக தலைவரின் சாதனைகளையும் வரலாற்றையும் யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்று அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

   

புதுமைப்பெண் திட்டம், நான் புதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், கலைஞர் உரிமைத்தொகை மற்றும் உலகிலேயே முதன்முறையாகக் கொண்டு வரப்பட்ட காலை உணவுத் திட்டம் போன்ற மு.க.ஸ்டாலினின் சாதனைகளைப் பட்டியலிட்ட செல்வபெருந்தகை, இரண்டாம் உலகப் போரில் வென்ற வின்சென்ட் சர்ச்சில் கூட அதற்கடுத்த தேர்தலில் தோற்றதை உதாரணமாகக் காட்டினார். மேலும், மு.க.ஸ்டாலினுக்கு வாக்களிக்காத மக்கள் இன்று தவறு செய்துவிட்டோம் எனக் கதறி அழுவதாகவும், சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகளைச் சரிசெய்யாமல் பிறரை இழிவுபடுத்துவது முறையல்ல என்றும் முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

   

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்ததும், செல்வபெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கூட்டணி மாறினாலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவருக்கு முதல்வர் விஜய் அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். இத்தகைய அரசியல் சூழலில், தோல்விக்கு பொறுப்பேற்று மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருக்கும் செல்வபெருந்தகை, முதல்வர் விஜய்யை இவ்வளவு காட்டமாக விமர்சித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.