தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும் களத்தில் உள்ள நிலையில் விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகின்றது. கட்சி தொடங்கிய பிறகு முதல் தேர்தலை சந்திக்கும் விஜயின் தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். விஜய் அமைக்கும் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற வாய்ப்புள்ளதாக சமீப காலமாகவே ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் இணையலாம் என்று தொடர்ந்து அரசியல் நோக்கர்களால் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி சீட்டுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி இல்லை என்றும் கொள்கையால் உருவாக்கப்பட்ட கூட்டணி என்றும் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். மேலும் இதை யாராலும் பிரிக்க முடியாது, இது எஃகு கூட்டணி என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
