அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் இறுதி முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளார். அதிமுகவின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சிக்கு எது நன்மையைத் தருமோ, அதை எடப்பாடி பழனிசாமி சரியாகச் செய்வார் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் குறித்து விமர்சித்த அவர், “தவெகவில் உண்மையான தொண்டர்கள் யாரும் இல்லை; வெறும் ரசிகர்கள் மட்டுமே உள்ளனர். விஜய்தான் அடுத்த பிரதமர் என அவர்களாகவே கூறிக்கொண்டு கற்பனை உலகில் வாழ்கிறார்கள்” என்று கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, சட்டமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள முதலமைச்சர் விஜய்யின் பதிலுரை குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார். “ஒரு முதலமைச்சர் என்பவர் சட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர்களோ கேள்வி எழுப்பும்போது உடனுக்குடன் அதற்குப் பதிலளிக்க வேண்டும். ஆனால் இவரோ பதில் சொல்வதற்கு மூன்று நாட்கள் அவகாசம் எடுத்துக்கொள்கிறார். சட்டமன்றத்திற்குள் நாளை திரைப்பட வசனம் போல பஞ்ச் டயலாக்குகளைப் பேசுவதற்காக, முதலமைச்சர் விஜய் 3 நாட்கள் ரிகர்சல் செய்துவிட்டு வருகிறார்” என நகையாடினார்.
