அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நடிகர் விஜய் மற்றும் அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த செங்கோட்டையன் ஆகியோரை இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். செங்கோட்டையன் ஒரு “செல்லாத நோட்டு” என்றும், அவரை தவெக நிர்வாகிகளே மதிப்பதில்லை என்றும் சாடிய செல்லூர் ராஜு, “விஜய்யை எந்த நாட்டுக்குச் செங்கோட்டையன் முதல்வராக்குவார்? வேண்டுமானால் ஏதாவது ஒரு கல்லூரிக்கு அவரை முதல்வராக்கலாம்” எனக் கிண்டல் செய்துள்ளார்
விஜய்யின் அரசியல் பேச்சுகளை “வாயால் வடை சுடுவது” என விமர்சித்த செல்லூர் ராஜு, தவெக தேர்தலுக்குப் பிறகு காணாமல் போய்விடும் என்றும், 2026 தேர்தலில் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையேதான் நேரடிப் போட்டி இருக்கும் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், செங்கோட்டையன் உதிர்ந்த இலை போன்றவர் என்றும், அவரது வெளியேற்றம் அதிமுகவிற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
