தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒரு பக்கம் தேர்தல் பிரச்சாரம் மறுபக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலைமை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதேசமயம் பல கட்சிகளும் தங்களுடைய கூட்டணியை அறிவித்துவிட்ட நிலையில் இன்னும் பாமக, தேமுதிக, தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை கூட்டணி குறித்து அறிவிக்காமல் உள்ளன. இந்த கட்சிகள் கூட்டணி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என தெரிகிறது.
இந்நிலையில் சென்னை அசோக் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்திலேயே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி தான். தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான். யாருடனும் கூட்டணி கிடையாது. எந்த காலத்திலும் நாம் தனித்து தான் போட்டியிடுவோம். இறைமகன் இயேசு கிறிஸ்து மீது ஆணையாக எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்பதை உறுதியாக கூறுகிறேன். பிறர் தோள் மீது ஏறி நின்று எங்கள் உயரத்தை காட்ட நாங்கள் விரும்பவில்லை என்று சீமான் சூளுரைத்துள்ளார்.
