“உங்களுக்கு மானம், ரோஷம் இருக்கா?”… கரூர் சம்பவத்திற்கு விஜய்தான் காரணமா?…. சீமான் உடைத்த பரபரப்பு உண்மை…!

By Nanthini on ஆனி 7, 2026

Spread the love

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்துள்ள நிலையில், அதன் தலைவர் விஜய்யை சீமான் மிகக் கடுமையாக விமர்சித்தார். திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் விஜய் பேசிய “மக்கள் இன்னும் கொஞ்சம் ஆதரித்திருக்கலாம்” என்ற கருத்தை சுட்டிக்காட்டிய சீமான், தவெகவின் தற்போதைய ஆட்சியை ஒரு “அரசியல் பேரிடர்” என்று மிக ஆவேசமாக வர்ணித்தார்.

   

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் முடிந்ததும் மோடி மற்றும் அமித்ஷாவின் காலில் விழுவார் என்று தேர்தல் களத்தில் விஜய் விமர்சித்ததை சீமான் தனது பேச்சில் நினைவுகூர்ந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த இரண்டு வாரங்களிலேயே தவெக தலைவர் விஜய் டெல்லிக்குச் சென்று பாஜாக தலைவர்களைச் சந்தித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், “அன்று ஸ்டாலினை விமர்சித்தவர், இன்று அவரே போய் விழுகிறார்; தமிழகம் போராடி தடுத்து வைத்திருந்த அனைத்து திட்டங்களிலும் தவெக அரசு கையெழுத்து போட்டுவிட்டது” என்று சாடினார். மேலும், கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட மரணங்களுக்கு விஜய்யின் அலட்சியமே காரணம் என்றும், அதற்கு தவெக அரசு இன்னும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

   

கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியையும் சீமான் விட்டுவைக்கவில்லை. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக காங்கிரஸாருக்கு மானமும் ரோஷமும் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். திமுகவின் தயவில் 10 எம்பி பதவிகளைப் பெற்றுக்கொண்டு, தற்போது தவெக ஆட்சியிலும் ஒரு எம்பி பதவியை வாங்கியிருக்கும் காங்கிரஸ், ஒரு சுயேச்சையான கட்சியாகச் செயல்படாமல் வீடு வீடாகப் பிச்சை எடுப்பது போல் கூட்டணிகளிடம் மண்டியிடுவதாகச் சாடினார். தவெகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், தங்களுக்கு தைரியமிருந்தால் திமுகவின் ஆதரவால் பெற்ற பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுடன் தனித்து நின்று வென்று காட்டட்டும் என்றும் சவால் விடுத்தார்.

 

இறுதியாக, ஊடகங்கள் தவெக அரசை அளவுக்கு அதிகமாகக் கொண்டாடுவதாகக் குறிப்பிட்ட சீமான், நாம் தமிழர் கட்சிக்குக் மக்கள் மத்தியில் உள்ள வாக்கு வங்கியையும் அதன் நிலையான வளர்ச்சியையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று சூளுரைத்தார். “தேர்தலில் நாம் தோற்றிருந்தாலும் நமக்கு என்று 4 விழுக்காடு நிலையான வாக்கு வங்கி இருக்கிறது; ஆனால் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தனித்து நின்றால் எங்கும் டெபாசிட் கூட வாங்க முடியாது” என்று குறிப்பிட்டார். தவெகவின் வெற்றியை ஒரு தற்காலிகமான பின்னடைவாகவே கருதும் சீமான், நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயணம் தங்கு தடையின்றித் தொடரும் என்றும், தமிழகத்தின் உண்மையான மாற்றத்திற்கான போராட்டத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் தனது உரையை நிறைவு செய்தார்.