செய்தியாளர்கள் சந்திப்பில், “தமிழகத்தில் தற்போது மும்முனைப் போட்டி நிலவுவதாகக் கூறுகிறார்களே, உங்களை ஏன் அதில் சேர்க்கவில்லை?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சீமான், “ஒரே மாதிரியான கொள்கைகளைக் கொண்டவர்களுக்குள் வேண்டுமானால் போட்டி இருக்கலாம். ஆனால் எனக்கு யாருமே போட்டி இல்லை. எனது தனித்துவமான கோட்பாடுகளுக்கு இணையான ஒரு போட்டியை இந்த உலகத்திலோ அல்லது இந்தியத் துணைக் கண்டத்திலோ உங்களால் சொல்ல முடியுமா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், மற்ற கட்சிகள் அதிகாரத்தை மையமாக வைத்து அரசியல் செய்கின்றன என்றும், ஆனால் தான் இனத்தின் உரிமை மற்றும் மண்ணின் நலனுக்காகக் கொள்கை ரீதியான அரசியலை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார். “என்னை மும்முனைப் போட்டியில் சேர்க்கவில்லை என்பது எனக்குக் கவலை இல்லை, ஏனெனில் நான் அந்தப் போட்டிக்கே அப்பாற்பட்டவன்” என்று திட்டவட்டமாகக் கூறினார். சீமானின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
