தமிழக வெற்றி்க் கழகத்தின் தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஆந்திர மாநிலத் துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமாக இந்தத் தூது நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டணியில் விஜய்க்குத் துணை முதல்வர் பதவி வழங்க பாஜக தரப்பு முன்வந்தபோதிலும், அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. துணை முதல்வர் பதவி என்பது அதிகாரமற்ற ஒரு அலங்காரப் பதவி என்று கருதும் விஜய், “பவர் ஷேரிங்” அடிப்படையில் 5 ஆண்டுகால ஆட்சியில் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அதிரடி நிபந்தனையை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும் விஜய்யின் இந்த “2.5 ஆண்டு கால முதலமைச்சர்” நிபந்தனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒருபுறம் பாஜகவின் கொள்கைகளைத் தனது கட்சி மாநாட்டில் கடுமையாக விமர்சித்த விஜய், தற்போது அதே கட்சியுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவரது அரசியல் நிலைப்பாட்டைச் சந்தேகிக்கும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன.
இருப்பினும், 2026 தேர்தலில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றி, அதன் மூலம் ஆட்சியதிகாரத்தில் நேரடிப் பங்கைப் பெற்றால் மட்டுமே தனது கட்சியின் எதிர்காலம் வலுவாக இருக்கும் என விஜய் கணக்குப் போடுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக மற்றும் அதிமுக தலைமை சம்மதிக்குமா என்பதுதான் தற்போதைய மர்மமாக நீடிக்கிறது.
