ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் உலகளவில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் இந்த விவகாரத்தில் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஒரு தூதுவராகச் செயல்பட்டு முக்கியப் பங்கு வகித்த போதிலும், தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட தங்களை பாகிஸ்தான் கருத்தில் கொள்ளவில்லை என்பது அமீரகத்தின் முதன்மையான புகாராகும்.
மேலும் ஈரானின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் அமீரகம் பெரும் சேதத்தைச் சந்தித்த நிலையில், தங்களை ஆலோசிக்காமல் அமெரிக்காவின் விருப்பப்படி பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்ததை ஒரு ‘துரோகமாக’ அந்நாடு கருதுகிறது. இந்த ஒப்பந்தத்தில் ஈரானின் நிபந்தனைகளை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டது அமீரகத்திற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இது குறிப்பாக, ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்பான விவகாரங்களில் அமீரகத்தின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தாது என்பதற்கான வலுவான உறுதிமொழிகள் இந்த ஒப்பந்தத்தில் இல்லை என்றும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஈரானின் செல்வாக்கைக் குறைக்கவும், அப்பகுதியில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அமீரகம் பல முயற்சிகளை எடுத்து வந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த ராஜதந்திர நகர்வு வளைகுடா நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
