10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த விபரீதம்…. திருச்செந்தூர் ரயிலில் அரங்கேறிய நயவஞ்சகம்…. போலீஸையே மிரள வைத்த ட்விஸ்ட்…..!

By Nanthini on ஐப்பசி 22, 2026

Spread the love

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலால், கடந்த அக்டோபர் 15 அன்று வீட்டைவிட்டு வெளியேறினார். திருச்செந்தூர் செல்லும் ரயிலில் ஏறிய அவரிடம், உடன் வந்த இரண்டு சிறுவர்கள் தவறாக நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதன்பின், திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அவரை அனாதையாக விட்டுவிட்டு அந்தச் சிறுவர்கள் தப்பியோடினர்.

செய்யவறியாது திகைத்து நின்ற அந்தச் சிறுமையை, குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாக் கூட்டநெரிசலை சாதகமாகப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட வந்த கார்த்திக், மணி மற்றும் சண்முகசுந்தரம் ஆகிய மூன்று பேர் கொண்ட கும்பல் ஏமாற்றி அழைத்துச் சென்றது. அங்கு மணி என்பவரால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். பின்னர், கார்த்திக் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, அக்டோபர் 16 அன்று மதுரை மாவட்டம் வாடிப்பட்டிக்கு அழைத்துச் சென்று அங்கும் அடைத்து வைத்து வன்கொடுமை செய்துள்ளார்.

   

தொடர் கொடுமைகளால் அதிர்ச்சியடைந்த மாணவி, எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று எண்ணி அக்கம்பக்கத்து மக்களின் உதவியோடு தப்பியோடி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை அடைந்தார். இதற்கிடையில், காணாமல் போன மாணவியைத் தேடிக் கொண்டிருந்த காவல்துறையினர், செல்போன் டவர் இருப்பிடம், சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் முக அடையாளக் காட்டும் தொழில்நுட்பம் (Facial Recognition) ஆகியவற்றைப் பயன்படுத்தி தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், அக்டோபர் 17 அன்று மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மாணவியை போலீசார் பத்திரமாக மீட்டுத் தேவையான மருத்துவ மற்றும் பாதுகாப்பு சிகிச்சைகளை வழங்கினர்.

   

இந்தச் சம்பவம் தொடர்பாக போக்சோ மற்றும் வன்கொடுமை சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றத்தில் ஈடுபட்ட மணி மற்றும் உடந்தையாக இருந்த சண்முகசுந்தரம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு சிறுவர்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்ததோடு, அவர்கள் இளஞ்சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர். மேலும், கார்த்திக் மீது திண்டுக்கல் மாவட்டத்தில் நிலுவையில் இருந்த வேறு ஒரு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்ததால், அவரும் முறைப்படி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.