செய்திகளை விரைவாகவும் திறமையாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தொலைக்காட்சிகள் இன்றும் முதன்மை ஊடகமாகத் திகழ்கின்றன. அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் உண்மைத்தன்மையுடன் செய்திகளை வழங்கி வரும் வேளையில், சில தனியார் தொலைக்காட்சிகள் பரபரப்பிற்காகவும், அதிகக் கவனத்தைப் பெறுவதற்காகவும் சித்தரிக்கப்பட்ட அல்லது மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை ஒளிபரப்புவதாகப் புகார்கள் எழுகின்றன. சில சமயங்களில் கவனக்குறைவாலும், யூகங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் இத்தகைய போலிச் செய்திகளாலும் பொதுமக்களிடையே வீண் குழப்பமும் அச்சமும் நிலவும் சூழ்நிலை உருவாகிறது.
இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அனைத்துத் தனியார் செய்தி சேனல்களுக்கும் கடுமையான எச்சரிக்கையுடன் கூடிய புதிய வழிகாட்டுதல்களை தற்போது வெளியிட்டுள்ளது. இப்புதிய விதிகளின்படி, தொலைக்காட்சிகளில் கிராபிக்ஸ், மெய்நிகர் செய்தி வாசிப்பாளர்கள் (Virtual Anchors) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது ஊடகங்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குற்றச் சம்பவங்கள் மற்றும் விபத்துக் காட்சிகளைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவதற்கும், வன்முறையை பெருமைப்படுத்தும் (Glorify) வகையில் சித்தரிப்பதற்கும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த செய்திகளை வெளியிடும்போது, அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு மிகுந்த கவனத்துடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் உணர்வுபூர்வமான பாதுகாப்புச் சார்ந்த நிகழ்வுகளின் போது எவ்வித நேரலை (Live Broadcast) ஒளிபரப்பும் செய்யக்கூடாது என்பதும் இந்த வழிகாட்டுதலின் முக்கிய அம்சமாகும். 1995-ஆம் ஆண்டின் கேபிள் தொலைக்காட்சி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ஒளிபரப்புக் குறியீடுகளை (Program and Advertising Codes) மீறும் சேனல்கள் மீது அரசுத் தரப்பில் தயவுதாட்சணியமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
