கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறைப் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த முத்து சஞ்சனா என்ற மாணவி தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் ஆசிரியை சிந்தியா, தமிழ் ஆசிரியை ராணி பாய், மற்றும் ஆங்கில ஆசிரியை சியாமளா தேவி ஆகிய மூன்று ஆசிரியைகள், மாணவியைத் தொடர்ந்து அதிக அளவில் மிரட்டியதாகவும், சக மாணவர்களுக்கு முன்னால் உருவக் கேலி செய்ததாகவும், கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, ஆங்கில ஆசிரியை சியாமளா தேவி, மாணவியின் நிறத்தையும் உருவத்தையும் கேலி செய்து, புத்தகங்களையும் தூக்கி வீசியுள்ளார். தொடர்ச்சியான இந்த மன உளைச்சலைத் தாங்க முடியாமல், கடந்த அக்டோபர் 10ஆம் தேதி பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தபோது, மாணவி தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். 45% தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சஞ்சனா, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவியின் தந்தை சக்திவேல், மாணவியின் வாக்குமூலம் இருந்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆசிரியர்களின் மிரட்டலே தற்கொலை முயற்சிக்குக் காரணம் என மாணவி பேசிய வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
