திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 10-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்ற பள்ளி வேன் மீது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த மாணவர்கள் அலறித் துடித்த நிலையில், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அப்பகுதியில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இல்லாததே இதுபோன்ற அடிக்கடி நிகழும் விபத்துகளுக்குக் காரணம் என குற்றம்சாட்டி, ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பான சூழலும் நிலவியது.
