“கெஞ்சியும் விடல.. ஆடை கிழியும் வரை போராடிய ஆசிரியை”…. பட்டப்பகலில் வண்டலூர் பாலத்தில் நடந்த கொடூரம்…. ஆசிரியை கதற கதற தாலி சங்கிலியை பறித்து ஓடிய மர்ம நபர்….!

By Nanthini on ஆவணி 23, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய அரசுப் பள்ளி ஆசிரியை வழியில் மர்ம நபரால்தாக்குதலுக்கு உள்ளாகி, நகையைப் பறிக்கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த செல்வி (49) என்ற இவர், ஊனமாஞ்சேரி அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். விடுமுறை நாளான நேற்று கணக்கெடுப்புப் பணியை நிறைவு செய்துவிட்டு, மாலை வேளையில் வண்டலூர் ரயில் நிலைய மேம்பாலம் வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

   

அவரை அமைதியாகப் பின்தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவன், திடீரென செல்வியின் கழுத்தில் இருந்த 7 சவரன் தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளான். அதிர்ச்சியடைந்த ஆசிரியை, தைரியத்துடன் போராடித் தனது சங்கிலியைப் பிடித்துக் கொண்டு “காப்பாற்றுங்கள்!” எனச் சத்தமிட்டுள்ளார். ஆனால், அந்த நபர் ஆசிரியையின் ஆடைக் கிழியும் அளவுக்கு பலத்தைப் பயன்படுத்தி நகையைப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளான்.

செல்வியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், அவரை மீட்டு ஆறுதல்படுத்தினர். பொதுமக்களின் உடனடி முயற்சியால் சங்கிலியில் இருந்த 2 சவரன் மதிப்புள்ள தாலி மட்டும் மீட்கப்பட்டு ஆசிரியையிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், மீதமுள்ள 5 சவரன் தங்கச் சங்கிலியுடன் அந்த நபர் அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் குதித்துத் தப்பிச் சென்றுவிட்டான்.

   

இச்சம்பவம் குறித்து ஓட்டேரி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். தப்பியோடிய நபரைப் பிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், தனியாகப் பயணிக்கும் பெண்கள் தங்களின் கழுத்துப் பகுதியைச் சேலை அல்லது துப்பட்டாவால் மூடியபடி கவனமாகச் செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்தத் துணிச்சலான கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.