பிஞ்சு நெஞ்சுகளில் அரசியல் நஞ்சா..? பள்ளிக்குள் தவெக நேரலை விவகாரத்தில் எதிர்ப்பு… பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்..!!

By Swetha on ஆடி 11, 2026

Spread the love

கரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் மக்கள் சந்திப்பு அரசியல் உரையை மாணவர்களுக்கு நேரலையாகத் திரையிட்டுக் காட்டிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து, எதிர்க்கட்சிகள் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவை மீறி தன்னிச்சையாகச் செயல்பட்டதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகாவை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குத் திமுக ஐடி விங் கடுமையான கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளது. “பள்ளிக்கூடம் என்பது அறிவை வளர்க்கத்தானே தவிர, உங்கள் சுயநல அரசியல் புகழைப் பாடுவதற்கும், பிஞ்சு நெஞ்சுகளில் அரசியல் நஞ்சை விதைப்பதற்கும் அல்ல” என்று தவெகவை சாடியுள்ளது. மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெறும் ஊடகங்களுக்கு மட்டும் பேட்டி கொடுத்து நாடகமாடாமல், வகுப்பறைகள் சுய விளம்பரக் களமாக மாறுவதைச் செயலிலும் தடுத்து நிறுத்திக் காட்ட வேண்டும் என்றும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டப் பலரும் இதற்குப் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

   

இதற்கு விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் ராஜ்மோகன், அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எந்தவொரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்குக் காட்டக் கூடாது என்பதில் அரசு தெளிவான கொள்கையைக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார். “கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை” என்ற முதலமைச்சரின் ஆணையைத் துறை ரீதியாக உறுதியாகக் கடைப்பிடிப்போம் எனக் குறிப்பிட்ட அவர், விதிமுறைகளை மீறி செயல்படும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.