நடிகர் சத்யராஜ், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் கணினி கல்வியகத்தின் பட்டமளிப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுகவின் முதன்மை வழிகாட்டும் கொள்கைகளான இட ஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி மற்றும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றம் ஆகியவை கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து நடைபெறும் எனக் குறிப்பிட்டார். மேலும், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் திமுக அமைத்துத் தந்த பாதையிலேயே செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
தவெக (தமிழக வெற்றி கழகம்) மற்றும் அதன் அரசியல் நகர்வுகளைக் கடுமையாகச் சாடிய அவர், அவசரப்பட்டு மாற்றம் என்ற பெயரில் வாக்களித்த சூழலையும் சுட்டிக்காட்டினார். வீடுகளிலுள்ள இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மூலம் முதியவர்கள் திசை திருப்பப்பட்டு ஓட்டுகள் பெறப்பட்டதாகத் தெரிவித்த அவர், 75 வயதான தனது மாமா கூட தன் மகளின் பேச்சைக் கேட்டு விசில் சின்னத்திற்கு வாக்களித்த நிகழ்வைக் குறிப்பிட்டுக் விமர்சித்தார். “நாம் வாங்கிக் கொடுத்த ஆட்டோவில் வேறு கொடி பறப்பதாகக் கூறுகிறார்கள், அது எத்தனை நாட்களுக்குப் பறக்கிறது என்று பார்க்கலாம்” என்றும் கேள்வி எழுப்பினார்.
இறுதியாக, புதிதாகக் கட்சி தொடங்கும் எவரும் பெரியார் மற்றும் அம்பேத்கரைத் தங்களின் கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமைக்கும், திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரு கண்கள் என அறிவிக்க வேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டிருப்பதே திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய சாதனையாகும் என சத்யராஜ் சுட்டிக்காட்டினார். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி மற்றும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட இயக்கம் தான் திமுக என்றும் அவர் பெருமிதத்துடன் பதிவு செய்தார்.
