தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து ‘எஸ் பாஸ்’ சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.
தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.
2005 வரை ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜுக்கு அப்போது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்தார். அந்த முடிவு அவரை இன்று வரை பிஸியான நடிகராக வைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் மட்டும் இல்லாமல் தற்போது இந்தி படங்கள் வரை நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஆரம்பகாலத்தில் சிவகுமாருடன் நெருக்கமாக இருந்த சத்யராஜ் புவனா ஒரு கேள்விக்குறி பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தை ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். சூர்யா தொகுத்து வழங்கிய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது ‘நான் சினிமாவுக்கு வந்த போது சினிமா பற்றி கற்றுக்கொள்ள தன்னோடு ஷூட்டிங் அழைத்துச் செல்வார் சிவகுமார் அண்ணன். அப்போது புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் இடம்பெறும் வசனம் ‘நாகராஜ் நீ கடப்பாரையை முழுங்கிட்டு அது செரிக்க சுக்கு கசாயம் குடிக்குற. ஆனா கடப்பாரை வயித்தியே கிழிச்சுடும்’ என்ற வசனத்தை ரஜினி சார் தன் ஸ்டைலில் வேகமாகப் பேசினார்.
அப்போது சிவகுமார் அண்ணன் குறுக்கிட்டு ‘இது நல்ல வசனம் இத பொறுமையா பேசனும்’ என நடித்துக் காட்டினார்.” எனக் கூறியுள்ளார். இதை சொன்னது மட்டும் இல்லாமல் ரஜினி மற்றும் சிவகுமார் மாதிரி மிமிக்ரி செய்தும் காட்ட அந்த நிகழ்ச்சியில் இருந்த சூர்யா உள்ளிட்ட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
