சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரபல நடிகர் சத்யராஜ், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட புதிய கட்சிகளையும், அவற்றின் அரசியல் நகர்வுகளையும் நேரடியாகச் சாடிப் பேசினார். “நாம் வாங்கிக் கொடுத்த ஆட்டோவில் வேறு ஏதோ ஒரு கொடி பறப்பதாகச் சொன்னார்கள்; பார்ப்போம், எவ்வளவு நாள்தான் அந்த கொடி பறக்கிறது என்று!” எனக் காட்டமாகக் குறிப்பிட்ட அவர், மாற்றம் என்ற பெயரில் அவசரப்பட்டு வாக்களித்த குடும்பங்களின் நிலைமையையும் சுட்டிக்காட்டினார். 75 வயதான தனது உறவினர் ஒருவர், அவரது மகளின் பிடிவாதத்தால் இந்த முறை மாற்றுச் சின்னத்திற்கு வாக்களித்த கதையைக் கூறி, அடுத்த முறை மக்கள் தங்கள் நியாயமான விருப்பத்தின்படியே வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சத்யராஜ், முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறித்துப் புகழாரம் சூட்டினார். “மா. சுப்பிரமணியனை நான் முன்னாள் அமைச்சர் என்று சொல்ல மாட்டேன்; எந்நாளும் அவர்தான் அமைச்சர். இந்நாள் சுகாதாரத் துறை அமைச்சருக்கும் அவர்தான் வழிகாட்டி. அவர் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தில்தான் இன்றைய அமைச்சரே நின்று கொண்டிருக்கிறார்,” என்று பாராட்டிய அவர், மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த தலைவர்கள் மனசாட்சியுள்ள மக்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பார்கள் என்றார்.
மேலும் திராவிட இயக்கங்களின் வரலாற்றுப் பின்னணியை நினைவுகூர்ந்த அவர், திமுக என்பது வெறும் தேர்தலுக்காகவோ அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவோ ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல என்று தெளிவுபடுத்தினார். 1951-52 காலகட்டத்தில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநில மாநாட்டில், தேர்தலில் போட்டியிடுவதை விட பெரியார் வழியில் சமூக சீர்திருத்த இயக்கமாகச் செயல்படுவதே முக்கியம் எனப் பெரும்பான்மையினர் வாக்களித்த வரலாற்றைக் சுட்டிக்காட்டினார். இடஒதுக்கீடு, அனைவருக்கும் கல்வி மற்றும் சமூகத்தில் அடித்தட்டிலிருக்கும் மக்களை உயர்த்தும் சமூகத் தொண்டே திமுகவின் முதன்மைக் கொள்கை என்றும், தேர்தல் அரசியல் என்பது அதற்கு அடுத்தபடியே என்றும் அவர் விளக்கினார்.
இன்றைய அரசியல் சூழலில் யார் புதிதாகக் கட்சி தொடங்கினாலும், ஆட்சி அமைத்தாலும் பெரியார், அம்பேத்கர் ஆகிய கொள்கைத் தலைவர்களின் பெயரையும், ‘திராவிடமும் தமிழ் தேசியமும் நமது இரண்டு கண்கள்’ என்ற கோட்பாட்டையும் முழங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று சத்யராஜ் சுட்டிக்காட்டினார். மாற்றுக் கருத்து கொண்டோரையும் கூடத் தனது கொள்கைப் பாதைக்குள் வரவழைத்ததுதான் திராவிட இயக்கம் செய்த மிகப்பெரிய சாதனை எனக் கூறி, திராவிடக் கொள்கைகளின் முக்கியத்துவத்தை தனது பேச்சின் வழியே உறுதியாகப் பதிவு செய்தார்.
