சுப்ரமண்யபுரம் என்ற கல்ட் கிளாசிக் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார். அந்த படத்தின் வெற்றியில் நடிகர் சசிகுமார் வெற்றி பெற, இயக்குனர் சசிகுமாருக்கு நீண்ட ஓய்வை கொடுத்துவிட்டார்.
அதன் பின்னர் அவர் ஈசன் என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கினார். நாடோடிகள், சுந்தரபாண்டியன் என அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாக தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு மினிமம் கியாரண்டி நடிகராக உருவானார்.
அவர் நடித்த சில படங்கள் சூப்பர் ஹிட்டானதும், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. அவற்றில் சில படங்கள் அந்தந்த ஊருக்கு ஏற்றமாதிரி கமர்ஷியலாக மாற்றப்பட்டன. அதுபற்றி சசிகுமார் பேசியுள்ளார்.
அதில் “சுந்தர பாண்டியன் படத்தோட தெலுங்கு ரீமேக்ல தமன்னா ஹீரோயினா? லட்சுமி மேனன் வேடத்தில் தமன்னாவா? இது எனக்கு தெரியாதே.. கன்னட ரீமேக் பாத்திருக்கேன். அதுல யாஷ் நடிச்சிருப்பார். அவர் அதைக் கரெக்ட்டா எங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணி பண்ணார். அந்த படம் நான் பாத்திருக்கேன். நல்ல படம். அப்ப யாஷ் கிட்ட எல்லாம் அடிக்கடி பேசுவேன்.
சுப்ரமண்யபுரத்தோட கன்னட ரீமேக் பாக்கல. ஒரு நாள் டிவில ஒரு பாட்டு ஓடுச்சு. அத என்கிட்ட காட்டி இது உன் படம்தான் என்றார்கள். என் படமா? எந்த படம் என்று கேட்டேன். சுப்ரமண்யபுரம் படம் என்றார்கள். அழகரும் பரமனும் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடுறாங்க.. ஆனா அந்த படம் நான் இன்னும் பாக்கல.” எனக் கூறியுள்ளார்.