பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டான சேது திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க முதலில் முரளிதான் ஒப்பந்தம் ஆனாராம். அப்போது அவர் பிஸியான நடிகராக இருந்தும் அந்த படத்துக்காக மொட்டை அடிக்க துணிச்சலாக சம்மதித்தாராம். ஆனால் அது நடக்காததால் அதன் பின்னர் விக்ரம்மை வைத்து சேது படத்தை எடுத்து பல போராட்டங்களுக்குப் பிறகு படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அந்த படத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அரிய ரத்தினங்கள் என்று பாலா, அமீர், விக்ரம் மற்றும் சசிகுமார் ஆகியோர்களை சொல்லலாம். அந்த படத்தில் இருந்துதான் அவர்களெல்லாம் புகழ் வெளிச்சம் பெற்று தங்களுடைய அடுத்தடுத்த படைப்புகளைக் கொடுத்தார்கள்.
இதில் இயக்குனர் அமீர் கொடுத்த கலையுச்சம் பெற்ற படைப்பு என்று பருத்திவீரன் படத்தை சொல்லலாம். அந்த படத்தில் கார்த்தியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி அவருக்கு 100 படங்களில் நடித்த கதாநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பைக் கிடைக்கவைத்தார். அந்த படைப்பின் பாதியைத் தொடுமளவுக்குக் கூட அமீரால் தன்னுடைய அடுத்த படத்தைக் கொடுக்க முடியவில்லை.

அமீர் பருத்திவீரன் படத்துக்கு முன்னர் இயக்கிய படம் ‘ராம்’. அந்த படத்தில் ஜீவா ஒரு பள்ளி மாணவனாக நடித்திருந்தார். அந்த படம் சுமாரான வணிக வெற்றியைப் பெற்றாலும் இயக்குனர் அமீருக்கும், நடிகர் ஜீவாவுக்கும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் எல்லாம் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றது.
இந்நிலையில் ராம் படத்துக்காக தான் உருவாக்கியக் கதையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து அமீர் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “நான் ராம் படம் கதை எழுதிய போது அந்த கதையின் கதாநாயகனுக்கு 13 வயசு என்றுதான் வைத்திருந்தேன். ஆனால் என்னிடம் இணை இயக்குனராக இருந்த சசிதான் அண்ணன் கதாநாயகனுக்கு ஒரு பதினாறு வயசுன்னு மாத்துங்க என்றான். அப்பதான் அவனுக்கு ஒரு ஹீரோயின் போட்டு காதல் எல்லாம் வைக்க முடியும். படமும் கொஞ்சம் கமர்ஷியலாக மாறும் என்றான். அதனால்தான் கதையில் சில மாற்றங்கள் செய்தோம்” எனக் கூறியுள்ளார்.
