தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தனிக்கட்சி தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான முகூர்த்த கால் நடும் பணி இன்று காலை பசும்பொன்னில் அவரது ஆதரவாளர்கள் முன்னிலையில் உற்சாகமாக நடைபெற்றது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மாற்றங்கள் மற்றும் சிறை தண்டனைக்குப் பிறகு சசிகலாவால் மீண்டும் கட்சியில் இணைய முடியாத சூழல் நிலவியது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவில் அவருக்கு இடம் மறுக்கப்பட்ட நிலையில், டிடிவி தினகரனும் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இத்தகைய அரசியல் சூழலில், தனது பலத்தை நிரூபிக்கவும் தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் சசிகலா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பசும்பொன்னில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் சசிகலா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்து, கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் ஆதரவாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தனது சகோதரர் திவாகரன் நடத்தி வரும் அண்ணா திராவிடர் கழகத்தை மீண்டும் உயிர்ப்பிக்கவும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
“தேர்தல் களத்தில் இறங்குவேன்” என்று அண்ணா நினைவு நாளன்று சசிகலா அறிவித்திருந்த நிலையில், இந்தப் பொதுக்கூட்டம் அவரது அரசியல் வாழ்வின் முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு அவர் எடுக்கும் இந்த முயற்சிகள், தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பசும்பொன் கூட்டத்திற்குப் பிறகு தமிழக அரசியலில் புதிய மாற்றங்கள் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
