“35 தொகுதிகள்.. அதிகாரத்தில் பங்கு”… விஜய்க்கு ரூட் போடும் காங்கிரஸ்?… ஸ்டாலின் கொடுத்த ‘கல்டா’… கேரளா ரூட்டில் தமிழக அரசியல்…

By Nanthini on மாசி 15, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, வரும் தேர்தலில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு திமுக தலைமை உடன்படவில்லை எனக் கூறப்படுகிறது. கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பது இரு கட்சிகளிடையே ஒருவிதமான இழுபறியை உருவாக்கியுள்ளது.

இந்தச் சூழலில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருந்த கிரிஷ் சோடங்கர் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் கே.சி. வேணுகோபால் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. திமுக தலைமையின் அதிருப்தி காரணமாகவே இந்த மாற்றம் நிகழ்வதாகச் சொல்லப்பட்டாலும், கே.சி. வேணுகோபாலின் வருகை தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தலாம். அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் இணக்கமான போக்கைக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

   

விஜய்யுடன் கூட்டணி அமைப்பது தமிழகத்தில் மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான கேரளாவிலும் காங்கிரஸுக்குச் சாதகமாக இருக்கும் என கே.சி. வேணுகோபால் கருதுவதாகக் கூறப்படுகிறது. கேரளாவில் விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம், அங்குள்ள சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸுக்குக் கைகொடுக்கும் என்பது அவரது கணக்காக உள்ளது. இதனால் காங்கிரஸ் தலைமை திமுக கூட்டணியைத் தொடருமா அல்லது விஜய்யுடன் கரம் கோர்க்குமா என்ற விவாதம் தற்பொழுது மேலோங்கியுள்ளது.

   

இருப்பினும், தற்போதைய நிலவரப்படி திமுகவுடனான உறவை முறித்துக்கொள்ள காங்கிரஸ் விரும்பவில்லை என்றாலும், தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு விஷயத்தில் பிடிவாதமாக இருக்கத் திட்டமிட்டுள்ளது. குறைந்தது 35 தொகுதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து காங்கிரஸ் காய்களை நகர்த்தி வருகிறது. 2026 தேர்தல் நெருங்கும் வேளையில், இந்தக் கூட்டணி மோதல்கள் தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.