“சிங்கத்தின் தலையையே தடவுவேன்” நான் எதற்கும் பயப்பட மாட்டேன்.. சசிகலாவின் ஆவேச பேச்சு..!!

By Soundarya on சித்திரை 8, 2026

Spread the love

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய சசிகலா, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தான் சிறை சென்றபோது நடந்த துரோகங்களை உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையில் யாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தாரோ, அவர்களே தான் சிறை சென்ற மூன்றே மாதங்களில் தன்னைக் கட்சியிலிருந்து நீக்கியதாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

நான்கு ஆண்டுச் சிறைவாசத்திற்குப் பிறகு தமிழகம் திரும்பியபோது, ஆளுங்கட்சியினர் தனக்கு இழைத்த தடைகளையும் அவர் பட்டியலிட்டார். தான் அதிமுக கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று கட்டளையிட்டதோடு, ஓசூர் எல்லையைத் தாண்டி கொடியுடன் வந்தால் கைது செய்ய முற்பட்டதையும் சுட்டிக்காட்டினார். மேலும், ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குத் தான் அஞ்சலி செலுத்த விடாமல் தடுப்பதற்காக, திறக்கப்பட்ட இரண்டே நாட்களில் பராமரிப்புப் பணி எனக்கூறி மணிமண்டபத்தைப் பூட்டியதையும் அவர் விமர்சித்தார்.

   

இத்தனையையும் தான் சகித்துக்கொண்டது தொண்டர்களுக்காகவும் மக்களுக்காகவுமே என்று கூறிய சசிகலா, எதற்கும் தான் அஞ்சப்போவதில்லை எனத் தெரிவித்தார். “சிங்கத்தைக் கண்டால் கூட பயப்படாமல் அதன் தலையைத் தடவிக்கொடுத்துவிட்டுப் போவேன்” என்று ஆவேசமாகப் பேசிய அவர், தன்னைத் தடுத்தவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தனது அரசியல் பயணம் தொடரும் என்பதைத் திட்டவட்டமாகப் பதிவு செய்தார்.