தமிழகச் சட்டப்பேரவையில் இன்று (செப்.7) உரையாற்றிய முதலமைச்சர் விஜய், திமுக அரசின் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவையைக் சூடாக்கினார். சர்க்காரியா கமிஷன் அறிக்கையைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், வீராணம் திட்ட டெண்டரில் 2.5 சதவீதம் கமிஷன் கேட்கப்பட்டதாக மாறன் மீதான குற்றச்சாட்டை விவரித்தார். தொடர்ந்து பேசிய அவர், “கலைஞர் மீது எனக்குப் பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு; நான் அவர் மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டு சுமத்தவில்லை, அரசு அறிக்கையில் உள்ள உண்மையையே சுட்டிக்காட்டுகிறேன்” எனக் குறிப்பிட்டார். மேலும், கடன் தவணை (EMI) செலுத்துவது போலத் தவணை முறையில் ₹29 லட்சம் பெறப்பட்டதாகவும், முரசொலி கட்டடப் பணிகளுக்காகப் பணமாகவும் பொருட்களாகவும் லஞ்சம் வாங்கப்பட்டதாகவும் சாடினார்.
திமுக தலைவர்கள் தங்களை ‘மிஸ்டர் கிளீன்’ என்று கூறிக்கொள்வதை விமர்சித்த முதலமைச்சர், அக்காலத்திலேயே நிலைமை இப்படி இருந்ததென்றால், தற்போது நிலைமை எவ்வாறு இருக்கும் என்று கேள்வி எழுப்பினார். கட்சி நிதியாக 7.5% முதல் 10% வரை பெறப்பட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், “செய்யும் தவறைக் கூட திட்டமிட்டு ஒழுங்காகச் செய்திருக்கிறார்கள்” என்று சாடினார். அமலாக்கத்துறை வெறும் இரண்டு கோப்புகளை திறந்ததற்கே இவ்வளவு தகவல்கள் வெளிவருகின்றன என்றால், மற்ற துறைகளின் கோப்புகளைத் திறந்தால் எத்தனை பூதங்கள் கிளம்புமோ என்று வியப்பு வெளியிட்டார். “ஆதாரம் வேண்டும் என்று கேட்டீர்களே, இந்த ஆதாரம் போதுமா?” என்றும் அவர் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
திமுகவின் புகழ்பெற்ற அரசியல் முழக்கமான “திமுக இருக்கின்ற இடத்தில் தப்பு நடக்காது; தப்பு நடக்கின்ற இடத்தில் திமுக இருக்காது” என்பதைப் சுட்டிக்காட்டி மறுத்த விஜய், “திமுக இருக்கின்ற இடத்தில்தான் தப்பு நடக்கும்; தப்பு நடக்கின்ற இடத்தில்தான் திமுக இருக்கும்” என அதை மாற்றிக் கூறினார். ஊழல் குற்றச்சாட்டு எழும்போது “நாங்கள் ஊழலே செய்யவில்லை” என்று மறுக்காமல், “ஆதாரம் எங்கே?” என்று மட்டுமே கேட்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் என்று குறிப்பிட்ட அவர், ஊழல் செய்பவர்கள்தான் ஆதாரத்தைக் கேட்டுத் தப்பிக்கப் பார்ப்பார்கள் எனச் சட்டப்பேரவையில் கொந்தளிப்புடன் தனது உரையை நிறைவு செய்தார்.
