நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. கவுண்டமணி-செந்திலின் பிராண்டட் காமெடி வசனமான வடக்குப்பட்டி இராமசாமி காமெடியில் இந்த பெயரை மட்டும் எடுத்து தியேட்டரில் ஒரு சிரிப்பு மத்தாப்பையே கொளுத்தியிருக்கிறார் சந்தானம்.
ஏற்கனவே சந்தானத்தை வைத்து டிக்கிலோனா என்ற படத்தினை இயக்கிய கார்த்திக் யோகி தற்போது மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். ஹீரோயினாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், நிழல்கள் ரவி, ரவி மரியா, பக்கோடா பாண்டி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
மார்க்கெட் போனாலும் பரவாயில்லை.. அந்தக் கால லேடி விக்ரம் செஞ்ச தரமான சம்பவம்
இதற்குமுன் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளிவந்த படங்களிலேயே இப்படம் தான் அதிக பட்ஜெட் படமாகும். மேலும் அதிக திரையரங்குகளில் (600) ரிலீஸான சந்தானம் படமும் இதுவேயாகும். இதனால் படம் எப்படி ரசிகர்களிடத்தில் சென்று சேர்ந்திருக்கிறது என்று எதிர்பார்த்த படக்குழுவினருக்கு இனிப்பான செய்தி வந்து கொண்டிருக்கிறது. படம் முழுக்க காமெடியால் நிரம்பி வழிவதால் ரசிகர்கள் எந்தக் காட்சிக்குச் சிரித்தோம் என்பதையே மறந்து இரண்டரை மணிநேரம் திரையில் சந்தானத்துடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து வருகின்றனர்.
இப்படத்தின் கதையைப் பற்றிப் பார்க்கும் போது, வடக்குபட்டி கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் அம்மன் கோவில் கட்டி மூட நம்பிக்கை வளர்த்து ஊர் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார் ராமசாமி. இதை தெரிந்து கொள்ளும் தாசில்தார், கோவில் வருமானத்தில் பங்கு கேட்க அதனை ராமசாமி மறுக்க ஊரில் இரண்டு குடும்பங்களை மோத விட்டு கோவிலை இழுத்து மூடி விடுகிறார் தாசில்தார். கோவிலை மீண்டும் திறக்க ராமசாமி செய்யும் தில்லாலங்கடி வேலைகள்தான் இந்த வடக்கு பட்டி ராமசாமி.
கடந்த வருடம் சந்தானம்நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ், 80’s பில்டப், கிக் ஆகிய படங்கள் போதிய அளவில் வெற்றியைச் சுவைக்காத நிலையில் மொத்தத்திற்கும் சேர்த்து இப்படத்தின் மூலம் சந்தானம் கம்பேக் கொடுத்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் படக்குழுவினர் உற்சாகமாகியுள்ளனர். மொத்தத்தில் வடக்குப்பட்டி ராமசாமி உன் பணத்துக்கு ஊ… என்பதைப் பொய்யாக்கும் விதமாக வசூலிலும் முன்னணியில் இருக்கிறது.
வடக்குப்பட்டி ராமசாமி – சிரிப்பு அலை
மதிப்பெண் 7/10