மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த ‘டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்’ உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிரடி ஆய்வு மேற்கொண்டது. இதில், சாக்கடை மற்றும் கழிவுநீர் தேங்கிய இடத்திற்கு அருகில் சமோசாக்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சமையல் மற்றும் குடிநீருக்கு வடிகட்டப்படாத தண்ணீரைப் பயன்படுத்தியது, உணவுகளுக்குச் சரியான லேபிள் மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாதது, 36 ஊழியர்களில் 26 பேரிடம் கட்டாய மருத்துவச் சான்றிதழ் இல்லாதது போன்ற பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அக்கடையின் உணவு உரிமத்தை சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள், கடையின் அனைத்துச் செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட்டனர்.
இதேபோல் நடைபெற்ற மற்றொரு ஆய்வில், மும்பை சென்ட்ரலில் உள்ள ஜெக்ஜீவன் ராம் மருத்துவமனையின் ரத்த வங்கியில் 12 ரகசிய விதிமீறல்கள் கண்டறியப்பட்டதால், அதன் உரிமத்தையும் வரும் அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்குத் தற்காலிகமாகச் சஸ்பெண்ட் செய்து எஃப்டிஏ உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
