தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமீரா ரெட்டி, தனது ஆரம்பகால சினிமா பயணத்தில் எதிர்கொண்ட நிறவெறி, உடல் கேலி மற்றும் உயர ரீதியான அழுத்தங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 2002-ஆம் ஆண்டு இந்தித் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தனது இயல்பான மாநிறத் தோலின் காரணமாகப் படப்பிடிப்பு தளங்களில் பெரும் சிரமங்களைச் சந்தித்ததாகக் கூறியுள்ளார். “ஒவ்வொரு படப்பிடிப்பின் போதும் எனது முகத்தில் மூன்று அல்லது நான்கு அடுக்குகள் வெள்ளை நிற மேக்கப் போடுவார்கள்; சில நேரங்களில் அது மிகவும் செயற்கையாகத் தோன்றும். முகத்தின் நிறத்திற்கு ஏற்ப என் உடலிலும் பிரத்யேக மேக்கப் போடுவார்கள்” என்று அவர் தனது குமுறலைப் பகிர்ந்துள்ளார்.
நிறம் மட்டுமன்றி, தனது உடல் தோற்றம் குறித்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டதாக சமீரா தெரிவித்துள்ளார். தான் குண்டாக இருப்பதாகக் கூறப்பட்டதால், திரையில் அழகாகத் தெரிவதற்காக பேடட் பிரா , ஹிப் பேட்ஸ் மற்றும் கண்களின் நிறத்தை மாற்ற காண்டாக்ட் லென்ஸ் போன்ற செயற்கையான விஷயங்களை நம்பத் தொடங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். “சினிமாவில் நான் நானாக இருக்க ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ள அவர், தனது அசாத்திய உயரத்தின் காரணமாக, தனக்கு இணையாக நடித்த கதாநாயகர்களை விட உயரமாகத் தெரிந்ததால், சில காட்சிகளில் குனிந்து நிற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
சமீராவின் இந்த வெளிப்படையான பேட்டியைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவர் குறிப்பிட்ட அந்த குள்ளமான கதாநாயகர் தெலுங்கு நடிகர் என்.டி.ஆர் ஆக இருக்கலாம் என்று ரசிகர்கள் பலரும் யூகித்து விவாதங்களை கிளப்பி வருகின்றனர். இருப்பினும், சமீரா ரெட்டி தனது பேட்டியில் எந்தவொரு நடிகரின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியாயினும், சினிமா துறையில் பெண்களின் அழகுக்காக நிர்ணயிக்கப்படும் கடுமையான தரநிலைகள், நிறப் பாகுபாடு மற்றும் உடல் ரீதியான அழுத்தங்கள் குறித்த விவாதத்தை சமீரா ரெட்டியின் இந்த நேர்காணல் தற்போதைய ரசிகர்களிடையே மீண்டும் தீவிரமாக உருவாக்கியுள்ளது.
