இந்தியக் கடற்படையில் 2027-ஆம் ஆண்டுக்கான அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசப்பற்று மிக்க இளைஞர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த வாய்ப்பின் மூலம், அக்னிவீர் எஸ்.எஸ்.ஆர் (SSR), அக்னிவீர் எம்.ஆர் (MR) மற்றும் அக்னிவீர் எஸ்.எஸ்.ஆர் (மருத்துவம்) ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் இத்திட்டத்தில், சிறப்பான செயல் திறன் கொண்ட வீரர்கள் பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன.
கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, அக்னிவீர் எம்.ஆர் பதவிக்கு 10-ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களும், எஸ்.எஸ்.ஆர் பதவிக்கு 12-ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். மருத்துவப் பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களைப் பயின்றிருப்பது அவசியமாகும். வயது வரம்பாக 2004 டிசம்பர் முதல் 2009 அக்டோபர் வரையிலான குறிப்பிட்ட தேதிகளுக்குள் பிறந்த ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஈர்க்கக்கூடிய ஊதியம் வழங்கப்படுகிறது. அக்னிவீர் எம்.ஆர் மற்றும் எஸ்.எஸ்.ஆர் பிரிவினருக்கு மாதம் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மருத்துவப் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு தகுதியைப் பொறுத்து மாதம் ரூ.21,000 முதல் ரூ.69,100 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் ஓட்டம், புஷ்-அப்கள் உள்ளிட்ட உடல் தகுதித் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் இறுதி செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6, 2026 வரை இந்தியக் கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக 550 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு 2026 மே மாதத்தில் நடைபெறும் என்றும், அதன் முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படையில் இணைந்து நாட்டிற்கு சேவை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
