மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், 8-வது ஊதியக் குழு தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 ஜனவரி 1 முதல் புதிய ஊதியக் குழு நடைமுறைக்கு வந்தாலும், அதற்கான பரிந்துரைகளை ஆய்வு செய்து அமல்படுத்த சுமார் 18 முதல் 24 மாதங்கள் வரை ஆகலாம்.
இதனால் திருத்தப்பட்ட புதிய சம்பளம் ஊழியர்களுக்கு 2027 அல்லது 2028-ல் தான் கையில் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த இடைப்பட்ட காலத்திற்கான ஊதிய உயர்வு கணக்கிடப்பட்டு, ‘அரியர்ஸ்’ எனப்படும் நிலுவைத் தொகையாக ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மொத்தமாக வழங்கப்படும்.
புதிய சம்பள உயர்வைத் தீர்மானிப்பதில் ‘ஃபிட்மென்ட் காரணி’ (Fitment Factor) முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது 1.92 முதல் 2.57 வரையிலான பல்வேறு காரணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 18,000-லிருந்து சுமார் ரூ. 34,500-க்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஓய்வூதியதாரர்களுக்கும் இதே விகிதத்தில் அடிப்படை ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்படும். பணவீக்கம் மற்றும் அரசின் நிதிநிலை ஆகியவற்றைப் பொறுத்து இறுதிக்கட்ட சம்பள விகிதங்கள் அறிவிக்கப்பட உள்ளதால், அரசு ஊழியர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
