தமிழ் சினிமாவில் இருந்து இசை கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து தனித்தியங்க ஆரம்பித்துள்ளது. தற்போது தனியிசை ஆல்பங்கள் அதிகளவில் வெளியாகி அதன் கலைஞர்கள் அதிக கவனம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் சமீபகாலமாக மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளார் இளம் இசைக் கலைஞரான சாய் அப்யங்கர்.
இவர் தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன் என்பது பலரும் அறியாதது. அவர்கள் இருவரும் பாடகர்கள் என்பதால் சிறு வயது முதலே அப்யங்கருக்கு இசை சொல்லிக்கொடுத்து மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆகும் அளவுக்கு உருவாகியுள்ளார்.
சாய் உருவாக்கிய கட்சி சேர மற்றும் ஆசைக் கூட ஆகிய பாடல்கள் மில்லியன் கணக்கில் வியூஸ்களைப் பெற்று இளைஞர்கள் மத்தியில் சென்சேஷன் ஹிட்டாகியுள்ளன. இதையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

அடுத்து சமீபத்தில் சூர்யா 45 படத்துக்கும் அவர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். அடுத்தடுத்து இரண்டு பெரிய படங்களில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளதே பெரியளவில் பார்க்கப்படும் நிலையில் இப்போது மூன்றாவதாக ஒரு படத்துக்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ப்ரதீப் ரங்கநாதனைக் கதாநாயகனாக வைத்து இயக்கும் புதிய படத்துக்கும் சாய் அப்யங்கர்தான் இசையமைப்பாளர். இந்த படத்தை சுதா கொங்கராவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய கீர்த்திவாசன் என்பவர் இயக்கவுள்ளார். இன்னும் ஒரு படம் கூட ரிலீஸாகாத நிலையில் அடுத்தடுத்து மூன்று படங்களுக்கு சாய் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
