தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.
அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.
90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். தீனா படம்தான் அவரை முழுமையாக ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது. அதன் பின்னர் அவர் நடித்த அனைத்துப் படங்களும் ஆக்ஷன் மசாலாப் படங்கள்தான்.
தற்போது அவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி திரைப்படம் முதலில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது.

இந்த படம் முழுவதும் அஜர்பைஸான் என்ற நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. அஜர்பைஸான் பெரிய அளவில் வெளியில் தெரியாத நாடு. ஆனால் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அஜர்பைஜான் என்ற பெயர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி தேடத் தொடங்கினர்.
இந்நிலையில் தற்போது கூகுள் வெளியிட்டுள்ள தகவலின் படி 2024 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் அஜர்பைஜான் முதலிடம் பிடித்துள்ளது.
