கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பக்தர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். பின்னர் டிசம்பர் 27-ஆம் தேதி நடை அடைக்கப்படும்.
இதற்காக இன்று முதல் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு தொடங்குகிறது. ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்தவர்களில் 70 ஆயிரம் பக்தர்கள் ஒரு நாளைக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரம் பம்பையில் ஸ்பாட் புக்கிங் மூலம் பதிவு செய்யும் 20 ஆயிரம் பக்தர்கள் ஒரு நாளைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவ சமூகத்தில் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அதிகாரபூர்வ இணையதளமான sabarimala.kerala.gov.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
முதலில் பெயர், முகவரி, புகைப்படம், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து சரிபார்த்த பிறகு குறிப்பிட்ட எண்ணிற்கு ஓடிபி வரும். இதனை தொடர்ந்து இமெயில், அதற்கான பாஸ்வேர்டை உள்ளீடு செய்து தரிசனம் செய்வதற்கான தேதியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதனுடன் பிரசாதம் ஏதேனும் தேவைப்பட்டால் அதனையும் தேர்வு செய்து முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ததற்கான குறுந்தகவல் இமெயில் மற்றும் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
