முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் வியூகங்களை வகுப்பதிலும் பெரும் பங்காற்றி வருபவர். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றிக்கு இவரது தேர்தல் வியூகங்களும் டெல்லி அரசியல் தொடர்புகளும் முக்கியக் காரணமாக அமைந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, கட்சியை மறுசீரமைக்கும் முயற்சியில் தலைவர் ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒருபகுதியாக நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது போன்ற அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் வேளையில், கட்சிக்குள் இதற்கான பொறுப்புகள் மற்றும் விமர்சனங்கள் குறித்துப் பல்வேறு பேச்சுக்கள் எழத் தொடங்கியுள்ளன.
சமீபத்தில் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த சபரீசன், தேர்தல் தோல்விக்கான பழியைத் தன் மீது சுமத்துவதற்குத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த நிர்வாகிகளின் அதிருப்திக்கு அஞ்சி கட்சியின் சீரமைப்புப் பணிகளை முன்பே செய்யத் தவறியது, தான் பரிந்துரைத்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது மற்றும் தவெக தலைவர் விஜய்க்கு மக்களிடம் இருந்த ஆதரவைக் கணித்து அதற்கேற்ப வியூகங்களை மாற்றத் தவறியதே இந்தத் தோல்விக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது. 2021-ஐ விட 2026-ல் தான் கடுமையாக உழைத்தும், தனது ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டதே பின்னடைவுக்கு வழிவகுத்தது என அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மறுபுறம், திமுகவின் உட்கட்சி அரசியலில் சபரீசனின் ஆதிக்கம் அதிகரித்து வருவதைத் துணைப் பொதுச்செயலாளரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் விரும்பவில்லை என்றும், இருவருக்கும் இடையே நிலவும் பனிப்போர் தற்போது தீவிரமடைந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதிகார மையத்தைக் கைப்பற்றுவதில் எழுந்துள்ள இந்த மோதல் போக்கு, தேர்தல் தோல்விக்குப் பிந்தைய திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய இத்தகைய உள்கட்சிப் பூசல்களும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் தமிழக அரசியலில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளன.
