திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்குத் தனி அறை ஒதுக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், கட்சிக்குள்ளும் முகாமின் உயர் மட்டத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. கட்சியில் எந்தவித அதிகாரப்பூர்வப் பொறுப்பும் வகிக்காத சபரீசன், உட்கட்சி மறுசீரமைப்பு மற்றும் முக்கிய நிர்வாகப் பணிகளை அறிவாலயத்தில் இருந்தவாறே மேற்பார்வையிட ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தரப்பு, இந்த மறைமுக அதிகார மைய உருவாக்கத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்பத்திற்குள்ளும் கட்சிக்குள்ளும் மகன் – மருமகன் இடையேயான அதிகாரப் போட்டி உச்சத்தை தொட்டுள்ள நிலையில், தன் குடும்ப அமைதியையும் கட்சியின் கட்டமைப்பு பலத்தையும் ஒருசேரக் காப்பாற்ற வேண்டிய சவாலான கட்டாயத்தில் ஸ்டாலின் உள்ளார்.
