“திமுக தேர்தல் தோல்விக்கு இதுதான் காரணமா?”… முதன்முறையாக மௌனம் கலைத்த சபரீசன்… வெளியான அந்த அறிக்கை…..!

By Nanthini on வைகாசி 19, 2026

Spread the love

தேர்தல் முடிவுகளுக்குப் பின் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பல்வேறு ஊகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகனும், ‘பென்’ (Populus Empowerment Network – PEN) நிறுவனத்தின் நிறுவனருமான சபரீசன் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களின் தீர்ப்பை முழுமையான பணிவுடனும் எளிமையுடனும் ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயகத்தில் தேர்தல் முடிவுகள் என்பது அரசியல், சமூகம், கட்டமைப்பு மற்றும் மக்களின் மனநிலை உள்ளிட்ட பல காரணிகளால் தீர்மானிக்கப்படுபவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபகாலமாக தேர்தல் தோல்விக்கான ஒட்டுமொத்தப் பொறுப்பையும் ‘பென்’ நிறுவனத்தின் மீதும், அதன் செயல்பாடுகள் மீதும் சுமத்த முயற்சிகள் நடப்பதாகக் குறிப்பிட்டுள்ள சபரீசன், ஒரு பெரிய அரசியல் முடிவை ஒரே ஒரு காரணத்தைக் கொண்டு மட்டும் விளக்கிவிட முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளார். மக்களுடன் டிஜிட்டல் வழியில் தொடர்பு கொள்ளவும், அரசியல் செயல்பாடுகளில் நவீன அணுகுமுறைகளைக் கொண்டு வரவுமே ‘பென்’ நிறுவனம் உருவாக்கப்பட்டது என்றும், தனது குழுவினர் அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் உழைத்துள்ளனர் என்றும் அவர் தனது அறிக்கையில் பாராட்டியுள்ளார்.

   

அரசியலில் விமர்சனங்களும் பொதுமக்களின் ஆய்வும் இயல்பானவை என்றாலும், உறுதிப்படுத்தப்படாத கதைகளையும் தவறான தகவல்களையும் பரப்புவது ஆரோக்கியமான ஜனநாயக விவாதத்தைத் திசைதிருப்பும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தாமல், மக்களின் உண்மையான கருத்துக்களைக் கேட்டு, அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறுவதே தங்களின் நோக்கம் என்றும், ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் பயனுள்ள ஆலோசனைகளையும் தாங்கள் எப்போதும் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

   

இறுதியாக, தேர்தல் முடிவுகளை அமைதியாகவும் தைரியமாகவும் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது செயலால் நிரூபித்துக் காட்டியுள்ளார் என்று சபரீசன் குறிப்பிட்டுள்ளார். தலைவர் காட்டிய அதே வழியில், ‘பென்’ அமைப்பும் தன் குறைகளை நேர்மையாகப் புரிந்துகொண்டு புதிய நோக்கத்துடன் செயல்படும் என்றும், இந்த தேர்தல் முடிவுகளில் தனக்கு ஏதேனும் பங்கு இருந்தால் அதற்கான பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாகவும், இனிவரும் காலங்களில் மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து தொடர்ந்து உழைக்கப் போவதாகவும் சபரீசன் உறுதியளித்துள்ளார்.