மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் 30 ஆண்டுகால நாடாளுமன்ற உரைகள் ‘Vaiko in Parliament’ என்ற பெயரில் 6 பாகங்களாக ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் வெளியிடப்பட உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட, தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அதனைப் பெற்றுக்கொள்ள உள்ளார். மல்லிகார்ஜுன கார்கே, டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட விழாவின் முக்கிய ஹைலைட்டாக, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு மாறியுள்ளது.
அரசியல் களத்தில் பரஸ்பர முரண்பாடுகளைக் கொண்ட பாமக மற்றும் விசிக தலைவர்கள் இந்த நூல் வெளியீட்டு விழாவில் ஒரே மேடையில் பங்கேற்கவிருப்பது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக கூட்டணியில் தற்போது விசிக அங்கம் வகித்து வரும் நிலையில், வன்னியர் சமூக வாக்குகளைக் கவரும் நோக்கில் பாமகவையும் தவெக கூட்டணிக்குள் கொண்டு வர அக்கட்சி விரும்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், விசிகவும் பாமகவும் ஒரே கூட்டணியில் இணைவது தற்போதைய சூழலில் சவாலான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், வைகோவின் புத்தக வெளியீட்டு விழா இவ்விரு தலைவர்களையும் இயல்பாகச் சந்திக்க வைப்பதற்கான ஒரு அரசியல் அச்சாரமாக அமையலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பொதுவானதொரு மேடையில் திருமாவளவனும் அன்புமணியும் சந்திப்பது, வருங்காலங்களில் அவர்களின் அரசியல் நகர்வுகளை இணக்கமாக்கி, தவெக கூட்டணியில் பாமக இணைவதற்குக் காரணியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதே தற்போதைய அரசியல் கணக்காக உள்ளது.
