அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து தீவை வாங்குவதற்குத் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதுடன், தேவைப்பட்டால் ராணுவத்தைப் பயன்படுத்தவும் தயங்கமாட்டேன் என தெரிவித்து வருவது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உக்ரைன் போர் காரணமாகத் தன்னை எதிர்த்து வரும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு தந்திரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
கிரீன்லாந்து விவகாரம் தங்களுக்குப் பெரிய கவலை அளிக்கவில்லை என்றும், அமெரிக்கா மற்ற நாடுகளின் நிலப்பரப்பை விலைக்கு வாங்குவது ஒன்றும் புதிய விஷயமல்ல என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த காலங்களில் ரஷ்யாவே அலாஸ்காவை அமெரிக்காவிற்கு விற்பனை செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய புதின், இந்த விவகாரத்தைத் டென்மார்க்கும் அமெரிக்காவும் தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும் என தெரிவித்துள்ளார்.
புதினின் இந்த அமைதியான மற்றும் டிரம்ப் ஆதரவு நிலைப்பாட்டிற்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் கணக்கு இருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். கிரீன்லாந்து விவகாரத்தால் ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டு, ‘நேட்டோ’ (NATO) அமைப்பு பலவீனமடைவதை ரஷ்யா சாதகமாகப் பார்க்கிறது.
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு நேட்டோ நாடுகள் முட்டுக்கட்டை போடக்கூடாது என டிரம்ப் கூறியிருப்பது ஐரோப்பிய நாடுகளைக் கோபமடையச் செய்துள்ளது. இதனால் ரஷ்யாவிற்கு எதிரான ஒருமித்த கருத்து சர்வதேச அளவில் நீர்த்துப்போகும் என்பதாலேயே, புதின் இந்தப் பிரச்சனையைத் தூர நின்றே ரசித்து வருகிறார். இந்த மோதல் வலுப்பெற்றால் நேட்டோ அமைப்பில் பிளவு ஏற்படும் என்பது ரஷ்யாவின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.
