‘வெற்றி தமிழகம்’ என்ற பெயரில் வரவிருக்கும் வேளாண் பட்ஜெட்டில் தமிழக அரசு பல வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பட்ஜெட்டின் முதன்மை அம்சமாக, நில உரிமையாளர்கள் மட்டுமின்றி, இதுவரை அரசு நலத்திட்டங்களை அடைவதில் சவால்களைச் சந்தித்து வந்த குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களையும் அங்கீகரிக்கும் வகையில் ‘உழவர் உரிமை அட்டை’ வழங்கப்படவுள்ளது. மேலும், வேளாண் உற்பத்தியை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ10,000 உதவித்தொகை வழங்கும் தொலைநோக்குத் திட்டம் இதில் இடம்பெறவுள்ளதாகத் தெரிகிறது.
விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ 3,500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ 4,500 ஆகவும் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனுடன், தமிழர்களின் பாரம்பரியப் பெருமையாகவும் வாழ்வாதார ஆதாரமாகவும் திகழும் பனை மரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், ‘தமிழகத்தில் பனை மரம் பாதுகாக்கப்பட்ட மரம்’ என்ற சிறப்பு அந்தஸ்தும் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் நனவாகும் பட்சத்தில், தமிழக வேளாண் துறையிலும் உழவர்களின் வாழ்விலும் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
