“நடிகர் பிரகாஷ் ராஜுக்கு 7 நாள் கெடு”.. மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ. 100 கோடி காலி?…திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் எடுத்த அதிரடி முடிவு…!

By Nanthini on சித்திரை 20, 2026

Spread the love

கேரளாவில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், ராமாயணக் காவியம் குறித்து தெரிவித்த கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ராமரும் லட்சுமணனும் வடஇந்தியாவில் இருந்து வந்து தென்னிந்தியாவில், குறிப்பாக இலங்கையில் போர் தொடுத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். பிரகாஷ் ராஜின் இந்த உரையானது இதிகாசங்களைத் திரித்துக் கூறுவதுடன், இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி சார்பில், அவரது வழக்கறிஞர் மூலம் பிரகாஷ் ராஜுக்கு அதிரடியாக சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், பிரகாஷ் ராஜின் பேச்சு மக்களிடையே தேவையற்ற பிரிவினையைத் தூண்டுவதாகவும், ‘ஆரிய – திராவிட’ மோதல்களுக்கு வழிவகுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுவெளியில் பிரபலமானவர்கள் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த கருத்துகளைப் பகிரும்போது மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   

பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸில், பிரகாஷ் ராஜ் தனது பேச்சுக்காக அடுத்த 7 நாட்களுக்குள் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில், ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும், உரிமையியல் மற்றும் குற்றவியல் ரீதியான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து பிரகாஷ் ராஜ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.