சென்னையில் 70k, பெங்களூர்ல 1L…. சிலிகான் சிட்டியின் அதிர்ச்சி முகத்தை வெளிச்சம் போட்ட பெண்…. ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 8, 2026

Spread the love

இந்தியாவின் ‘சிலிகான் வேலி’ என்று அழைக்கப்படும் பெங்களூரு, ஐடி துறையின் மையமாக மாறுவதற்கு முன்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் உகந்த நகரமாக விளங்கியது. ஆனால், கடந்த இரண்டு தசாப்தங்களில் இங்கு ஏற்பட்டுள்ள அசுரத்தனமான வளர்ச்சியானது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. கடந்த 2000-ஆம் ஆண்டில் சுமார் 56 லட்சமாக இருந்த நகரின் மக்கள் தொகை இன்று 1.4 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல, 15 லட்சமாக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை இன்று 1.25 கோடியைத் தாண்டியுள்ளது. நகரின் கட்டமைப்பு 30 சதவீதத்திலிருந்து 80 சதவீதத்திற்கும் அதிகமாக விரிவடைந்துள்ள நிலையில், ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு பெருகியுள்ளது.

   

இந்த அசுர வளர்ச்சி பெங்களூருவின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய அதேவேளையில், பொதுமக்களுக்கு, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் அமைதியான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த இந்நகரம், தற்போது இந்தியாவின் பல பெருநகரங்களை விட அதிக வாழ்க்கைச் செலவு கொண்ட இடமாக உருவெடுத்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள், வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்துச் செலவுகள் என அனைத்துமே கடந்த சில ஆண்டுகளில் கட்டுக்கடங்காமல் உயர்ந்துவிட்டதால், சாதாரண மக்களின் நிம்மதி கேள்விக்குறியாகியுள்ளது.

   

சமீபத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வைரல் வீடியோ இந்த யதார்த்தத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதில், பெங்களூருவில் நல்லதொரு குடியிருப்புப் பகுதியில் வீடு வாடகைக்கு எடுக்கவே ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை தேவைப்படுவதாகவும், சொந்தமாக வீடு வாங்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இன்றைய சூழலில் பெங்களூருவில் ஓரளவுக்கு சிரமமின்றி வாழ மாதம் குறைந்தது ரூ.1 லட்சம் வேண்டும் என்றும், ரூ.4 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே நன்றாக வாழ முடியும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

 

சென்னையுடன் ஒப்பிடும்போது பெங்களூருவில் வாழ்க்கைச் செலவும், வாடகையும் மிக அதிகம் என்றே கூற வேண்டும். சென்னையில் ரூ.65,000 முதல் ரூ.70,000 வரை ஈட்டுவதன் மூலம் கிடைக்கும் வாழ்க்கைத் தரம், பெங்களூரில் ரூ.1 லட்சம் சம்பாதித்தால்தான் சாத்தியமாகிறது. இந்த அதீத விலைவாசி உயர்வின் காரணமாக, மாதம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்கள் பெங்களூருவில் குடியேறுவதைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஐடி தலைநகரமாக ஜொலிக்கும் பெங்களூரு, இன்று நடுத்தர வர்க்கத்தினரின் எட்டாக்கனியாக மாறி வருவது மறுக்க முடியாத சோக உண்தியாகும்.