தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், அரசின் முதல் பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்குவோம் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்திருந்த சூழலில், தவெக அரசு மீது பல்வேறு முறைகேடு புகார்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே பழனியில் அரசுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தில் மோசடி நடந்ததாகப் புகார் எழுந்த நிலையில், தற்போது பண்ருட்டியில் பஞ்சமி நில விற்பனை தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய வேல்முருகன், பண்ருட்டி வட்டத்தில் உள்ள ரூ.1,000 கோடி மதிப்பிலான 100 ஏக்கர் பஞ்சமி நிலத்தை, தவெக அரசின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தலையீட்டுடன் ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்ய தீவிர முயற்சிகள் நடைபெற்று வருவதாகப் பரபரப்புக் குற்றச்சாட்டைச் சுமத்தினார்.
இந்த நிலம் குறித்து விளக்கிய வேல்முருகன், 1924-ஆம் ஆண்டு பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை ஒரு தனியார் நிறுவனம் வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி வாங்கியதாகவும், பின்னர் தொழிற்சாலையை மூடிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார். தற்போது ஏக்கர் ரூ.10 கோடி என மதிப்பு உயர்ந்துள்ள இந்த நிலத்தில் ஏழை மக்களுக்கு வீடுகளோ அல்லது தொழிற்கூடங்களோ அமைத்துத் தர வேண்டும் எனப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், தவெக அரசு தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அதை மனைப்பிரிவுகளாக விற்க முற்படுவதாகக் குறிப்பிட்டார்.
பத்திரப்பதிவுத் துறையின் கூடுதல் ஐ.ஜி ஆலோசனை மற்றும் மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே இந்த நில விற்பனை முயற்சி நடப்பதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பாகத் துறைச் செயலாளருக்குப் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். ஏழை மற்றும் பட்டியலின மக்களுக்குச் சொந்தமான நிலத்தைத் தாரைவார்ப்பதற்கு அனுமதி அளித்த அந்த ‘மேலிடம்’ எது என்று கேள்வி எழுப்பியுள்ள வேல்முருகன், ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சியைப் பிடித்த முதலமைச்சரும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சரும் இதற்கு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
